அராலி குள்ள மனிதர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பு: மணிவண்ணன்

யாழ். அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அராலி குள்ள மனிதர்களின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இதற்கு முன்னரும் கிறிஸ் பூதங்களை உருவாக்கி தமிழர் தாயகத்திலே பாரிய அச்ச சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று தற்போது, அராலியிலே ஒரு விடயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள் போன்று வந்து வீடுகளுக்கு கல்லால் எறிவது என அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிச்சயமாக இந்த விடயம் குறித்த பகுதியிலேயே இருக்கின்ற இராணுவத்தினருக்கு அல்லது காவல்துறைக்கு தெரியாமல் நடப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts