தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் குறைந்தக் கட்டணத்திலான விமான சேவை மிகவிரைவில் ஆரம்பிக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் ஜோன் அமரதுங்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கூறியுள்ளார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“வெளிநாட்டுப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்குப் பயணங்களை மேற்கொள்வதில், பல்வேறு பயணப் பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றனர். இதனால் தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணத்துக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தவகையில் மிக விரைவில் குறைந்த கட்டண விமான சேவையை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளோம். குறித்த செயற்பாடு இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளை இலகுபடுத்தப்படும்.
அத்தோடு, இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் தற்போது காணப்படுகின்ற பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளதுடன் வெகுவிரைவில் ஹிங்குராக்கொட விமான நிலையம் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும்” எனவும் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.