சிறுமிகள் சிலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டு வழக்கின் ஆசிரியர் சந்தேகநபராவார். அவருடைய தரப்பினரே சாட்சிகளுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை வழங்கி அவற்றின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்தால், சந்தேகநபர் வெளியில் வந்து சாட்சிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் உண்டு? ஆகவே சந்தேகநபருக்கு பிணை அனுமதி வழங்கப்படக்கூடாது”
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி தில்லைநாதன் அர்ஜூனா மல்லாகம் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.
“ஆசிரியரே மாணவிகளைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது வேலியே பயிரை மேயும் நிலையாகும். இந்தச் சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டையில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எவரும் ஆசிரியர் சார்பில் முன்னிலையாக முன்வரவில்லை” என்றும் சட்டத்தரணி தி.அர்ஜூனா மன்றுரைத்தார்.
வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.
அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஆசிரியர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் மூத்த சட்டத்தரணி புவிதரனின் ஏற்பாட்டில் தில்லைநாதன் அர்ஜூனா முன்னிலையானார்.
சந்தேகநபரின் சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் மீதான சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
“ஆசிரியர் ஒழுக்கமுடையவர். யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்கள் மூவர் வழங்கிய தகவலையடுத்து சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுமிகளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளார்.
அதனடிப்படையிலேயே ஆசிரியர் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளை மிரட்டி வாக்குமூலம் பெற்றதற்கு ஆதாரமாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தாயார் ஒருவர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு எதிராக வழங்கிய முறைப்பாடு உண்டு.
அந்த தாயார் இந்த மன்றில் இன்று உள்ளார்” என்று மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.
அத்துடன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் சட்டத்தரணி சிறிகாந்தா முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் முன்னிலையான தி.அர்ஜூனா சமர்ப்பணம் செய்தார்.
“சிறுமிகள் சிலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டு வழக்கின் ஆசிரியர் சந்தேகநபராவார். அவருடைய தரப்பினரே சாட்சிகளுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை வழங்கி அவற்றின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்தால், சந்தேகநபர் வெளியில் வந்து சாட்சிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் உண்டு?
ஆசிரியரே மாணவிகளைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது வேலியே பயிரை மேயும் நிலையாகும்.
ஆசிரியர் கற்பிக்கும் வகுப்பறையுடன் பிரேத்தியேகமாக சிறிய அறை ஒன்று உள்ளது என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. எதற்காக பிரேத்தியேக அறை வைத்திருக்கவேண்டும்?
இந்தச் சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டையில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவங்கள் நடைபெற்ற கல்வி நிலையம் தீயிடப்பட்டது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எவரும் ஆசிரியர் சார்பில் முன்னிலையாக முன்வரவில்லை.
சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சந்தேகநபருக்கு பிணை வழங்கக் கூடாது” என்று சட்டத்தரணி அர்ஜூனா மன்றுரைத்தார்.
“தனியார் கல்வி நிலையத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கல்விச் சமூகம் தீயிடவில்லை. காவாலிகளே தீயிட்டனர்” என்று சட்டத்தரணி சிறிகாந்தா குற்றஞ்சாட்டினார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பிணை விண்ணப்பம் மீதான கட்டளை வரும் 7ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார்.
அன்றுவரை சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டது.