வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ஏக்கர் தனியார் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 318 ஏக்கர் அரச நிலமும், 160 ஏக்கர் தனியார் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக வாக்குறுதியளித்திருந்தது.
இந்தநிலையிலேயே வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு கூறியுள்ளது.