அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அந்த வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் கதவு, கண்ணாடிகள் உள்பட வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (17) செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.
“மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தது. அவர்கள் முகத்தை மூடி துணிகட்டியிருந்தனர். வீட்டுக் கதவை அடித்து சேதப்படுத்தியது. வீட்டுக்குள் நுழைந்து யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தது. குளிசாதனப் பெட்டி உள்பட்ட பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியது.
வீட்டிலிருந்தவர்கள் அச்சுறுத்தல் காரணமாக மறைந்துகொண்டனர்” என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மகன் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். மற்றொரு மகன் இங்கு உள்ளார். அவரை அச்சுறுத்தும் வகையிலே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்