அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச் செய்யவிடாமல் வேறு ஒருவரைத் தான் ஏற்பாடு செய்வார் என ஆலய தர்மகத்தா கூறினார் எனவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்தே கொடியேற்ற விடாமல் தர்மகத்தா தடுத்துள்ளார் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இவ்வருடம் புதிய சித்திரத் தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், கொடியேற்றம் இடம்பெறாமையால் தேர் வெள்ளோட்டம் எப்படி நடைபெறும் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆலய அர்ச்சகர் உட்பட பிரதேச மக்கள் பலரும் தர்மகத்தாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் இம்மியும் இளகவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனால், நேற்றைய கொடியேற்றத்திற்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்ட கும்பங்கள் அனைத்தும் நேற்றுக் காலை கலைக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் நித்திய பூசை மட்டும் இடம்பெற்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் வரணியில் ஜே.சி.பி வாகனத்தால் தேர் இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், நேற்று ஒரு ஆலயத்தில் கொடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.