சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார்.
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கபூர் அரசாங்கமானது இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சமத்துவம், ஊழல், மோசடியற்ற ஆட்சி, சட்டங்களுக்கு ஏற்ப கடுமையாக நடவடிக்கைகள் என்பனவற்றை கடைப்பிடித்து வருகின்றது.
இந்நிலையில் சிங்கபூருடனான ஒப்பந்தம் செய்வதன் மூலம் இலங்கையில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய கொள்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சி என்பனவற்றை பெற்றுக்கொள்ள முடியம் என கூறினார்.
மேலும் இலங்கை -சிங்கப்பூர் ஒப்பந்தம் மற்றும் இந்தியா- இலங்கைக்கிடையிலான ஒப்பந்தத்தால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என பலர் விமர்சிக்கின்றனர்.
குறித்த ஒப்பந்தங்கள் நாட்டுக்கு ஆபத்து என எண்ணினால் நாட்டை அபிவிருத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒருபோதும் முடியாத நிலை ஏற்படும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.