எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றிலுள்ள 92 மொத்த எதிரணி உறுப்பினர்களில் 70 பேர் எமது அணியிலேயே உள்ளார்கள். இந்த நிலையில், அதிக உறுப்பினர்கள் கொண்ட எமது தரப்புக்கு எதிரணித் தலைமைப் பொறுப்பை வழங்காது இரா.சம்பந்தனுக்கு வழங்கியுள்ளமையானது நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது என வலியுறுத்தி சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.
இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இதுவரை இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு எதிர்ப்பினையும் வெளியிட்டதே கிடையாது. அரசாங்கம் கொண்டுவரும் அனைத்துப் பிரேரணைகளுக்கும் இதுவரை ஆதரவினை மட்டுமே இவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் இவர்கள் எதிராகவே வாக்களித்தார்கள். உண்மையில், இது வேறு எந்த எதிர்க்கட்சிகளும் செய்யாத செயற்பாடுகளாகும்.
அதுமட்டுமன்றி, அமைச்சர் மனோ கணேசனும் இரா.சம்பந்தனுக்கு அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால், எமது ஜனநாயகம் மற்றும் உரிமையும் பாதிக்கப்படுகிறது. எனவே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்கிவிட்டு, ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்றக்குழத் தலைவரான தினேஸ் குணவர்த்தனவை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.