சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது, இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் கூறிய விடயம் தொடர்பில் மன்றில் சட்டத்தரணி முன்வைத்திருந்தார்.,
மேலும் இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
யாழ்.சுழிபுரம் – காட்டுபுலம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பாடாசலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலாமாக வீசப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யபப்ட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.