போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இந்த கூட்டு தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்களின் ஆதரவு வலுப்பெற்றதற்கமைய, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வரைவு சட்டமூலத்தை தயார் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை பணித்துள்ளார்.
இதேவேளை, இந்த தீர்மானத்திற்கு மஹாநாயக்கர்களின் ஆதரவும் கிட்டியுள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.