மல்லாகத்தில் இளைஞர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் நபரைத் தெல்லிப்பழைப் பொலிஸார் கைது செய்யாது தவிர்ப்பது தொடர்பாகச் சுட்டிக்காட்டி விசாரணையில் திருப்தியில்லை என்று எதிராளி தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்ததை அடுத்து உரியமுறையில் விசாரிக்கத் தவறினால் வேறு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்கை விசாரிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார் மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.அலெக்ஸ்ராஜா.
மல்லாகத்தில் கடந்த 17ஆம் திகதி இரவு இரு குழுக்கு இடையில் நடந்த மோதல் ஒன்றின் இடையே இளைஞர் ஒருவரைச் சுட்டுக்கொன்றார் பொலிஸ் நபர். இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நடந்து வருகின்றது.
இளைஞர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையவர்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் எனப் 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் முன் உத்தரவு ஏதுமின்றி இளைஞனைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
‘‘பொலிஸ் நபர் சுடுவதற்கு முன்னர் எதுவித எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே சூடு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் செயற்பாடு மிருகத்தனமானது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை தேவை’’ என்று எதிராளிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்தே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படாவிட்டால் வேறு பொலிஸ் நிலையம் ஊடாக விசாரணை நடத்துவது குறித்துப் பரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்று நீதிவான் எச்சரித்தார்.
கைதானவர்களது மறியல் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. கைதானவர்களில் ஒருவர் இன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றவேண்டியிருப்பதால், அவருக்குத் தற்காலிகப் பிணை வழங்கிய நீதிமன்றம், நாளைமறுதினம் திங்கட்கிழமை அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.