வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என வட.மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு இனம் கல்வியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். எனவே எமது பிரதேச மாணவர்களும் இளைஞர்களும் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் தகுந்த தொழில் வாய்ப்புக்களை தாமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
வெறுமனே அரசாங்கத் தொழிலை எதிர்பார்த்து இருப்பதை விடுத்து சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி முன்னேற வேண்டும். இதற்கு எமது அமைச்சு பல வழிகளில் உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றது.
இவ்வாறானவர்களுக்கு பல தொழிற்பயிற்சிகளை வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம். இதில் அனைத்து இளைஞர்களும் ஆர்வத்துடன் இணைந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் கூட இந்தியாவில் பல தொழிற்பயிற்சிகளில் பங்குபற்றுவதற்கு நாம் பத்திரிகைகள் ஊடாக அறிவித்திருந்தோம். ஆனால் இவ்வாறான பயிற்சிகளுக்கு எவருமே விண்ணப்பிக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விடயம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.