“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உள்பட நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.
“சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றிரவு முதல் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டவர், சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என்று ஒத்துக்கொண்டார். அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சந்தேகநபரை அழைத்துச் சென்று இன்று அதிகாலைவரை விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமியின் ஆடைகளை எரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
“தோடுகளை திருடவே சிறுமியைக் கொலை செய்தேன், போதையில் கொலை செய்துவிட்டேன், விரோதம் காரணமாக கொலை செய்தேன்” என்று மாறுபட்ட தகவல்களை வழங்கி பிரதான சந்தேகநபர் மனநோயாளி போன்று நடிக்கிறார்.
தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. உண்மை வரவழைக்கப்பட்ட பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.