Ad Widget

கிளைமோர் மீட்பு: 4 சந்தேகநபர்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்

கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றதுடன், மேற்கொண்ட விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடி மற்றும் 20 கிலொ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு மற்றும் கிளைமோர் குண்டை மறைவிலிருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகளுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதயில் இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து முச்சக்கர வண்டி சாரதி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பிஓடிவிட்டார்” என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தப்பி ஓடினார் என்று தெரிவிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் ( ஒரு கையை இழந்தவர்) கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு விரைந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு உத்தியோகத்தர்களுடன் இணைந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொறுப்பெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மீட்கப்பட்ட அலைபேசிகளில் பதிவாகியுள்ள இலக்கங்களின் அடிப்படையில் மேலும் சிலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts