கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அதனை அடித்துக் கொன்றுள்ளனர்.
அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் குறித்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகளால் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. மாறாக வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உட்பட 10 பேரை சிறுத்தை காயப்படுத்தியது.
மேலும் சிறுத்தையை ஊசி மூலம் பிடிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தமையினால் அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தொடர்ந்தும் அச்சத்துக்குள்ளான நிலையில் குறித்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது வேறு வழியின்றி சிறுத்தையை அடித்துக்கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும் நீண்டகாலமாக கிளிநொச்சி அம்பாள் குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வந்த சிறுத்தை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. காயமடைந்த இளைஞர்கள் மற்றும் ஊழியர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.