வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், விரும்பும் மாகாணங்கள் இணைந்து கொள்ள வழிவிடுமாறும் வடக்கு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக, தம்மைத் தானே நிர்வகிக்கின்ற ஒரு இனமாக வாழ, அனுமதிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்றும் வலிய அவர், இப்பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமலிருப்பது, காணாமல் போனோர் நிலை பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படாமை, இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்படாமை, தொடரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.