தவராசா கோரிய பணத்துடன் மாகாண சபையில் கிழக்கு மாணவர்கள்!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7 ஆயிரம் ரூபாவை அவரிடம் ஒப்படைப்பதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வருகைத் தந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, அவர் கோரிய பணத் தொகையை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களிடம் சேகரித்து இன்று மாகாண சபைக்கு எடுத்து வந்துள்ளனர். “பாவப்பட்ட பணம்“ என எழுதப்பட்ட பணப்பொதியில் இப்பணம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்துடன் மாகாண சபைக்கு வந்த மாணவர்களிடம் பணத்தை பெறுவதற்கு, அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பணத்தை வழங்க மாணவர்கள் முயற்சித்த போது, குறித்த விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் எனவே பணத்தை பெற்றுக்கொள்ள போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்கட்சித் தலைவருடன் இது குறித்து பேசுங்கள் என முதலமைச்சர் மாணவர்களிடம் கூறியுள்ளார். இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts