Ad Widget

கொக்குவில் வாள்வெட்டு: கைதாகியவர்களே பாதிக்கப்பட்டவர்கள்!! : முறைப்பாட்டாளருக்கு அழைப்பாணை!!

“கொக்குவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர்” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார்.

“சம்பவத்தை ஊடகங்கள் அவதானித்து செய்தி வெளியிட்டுள்ளனவே?” என்று மன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மூத்த சட்டத்தரணி, ஊடகங்கள் பொலிஸார் சொல்பவற்றையே செய்தியாக வெளியிடுகின்றன என்று மன்றுரைத்தார்.

அதனால் முறைப்பாட்டாளரை வரும் 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் (10) 11.30 மணியளவில் வாள்வெட்டு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது.

“4 மோட்டார் சைக்கிளிலில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தித்தினர். கும்பல் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

பிடிபட்டவர் மக்களால் கவனிக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் பிடிபட்டனர்” என்று பொலிஸார் நேற்றுத் தெரிவித்திருந்தனர்.

எனினும் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (11) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போதே சந்தேநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மேற்கண்டவாறு மன்றுரைத்தார்.

சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொலிப் பதிவு ஒன்றை பொலிஸார் மன்றில் முன்வைத்தனர்.

“காணொலியில் இரண்டு தரப்பும் மோதுகின்றன. மற்றைய தரப்பிடம் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் உள்ளன” என்று மன்றில் சுட்டிக்காட்டப்பட்டன.

பொலிஸார் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணியின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் முறைப்பாட்டாளரை வரும் 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் நீதிவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டது.

Related Posts