எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் விஹாரைகளை அமைக்கக் கூடாதென தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னெடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு ஹற்றன் இலங்கை திறந்த பல்கலைக்கழக கிளைக் கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் பிளவுபடுத்த விக்னேஸ்வரனும் சுமந்திரனும் முனைகின்றனர். எந்த ஒரு சமயமும் மக்களுக்கு தீமையானவற்றை போதிக்கவில்லை.
பௌத்தமாக இருந்தாலும், இந்து சமயமாக இருந்தாலும், இஸ்லாம் சமயமாக இருந்தாலும் சகல சமயங்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கே போதிக்கின்றன.
அப்படியென்றால் ஏன் நாம் சமயத்தால் வேறுபட வேண்டும்? இன்று சுமார் 3500 குடும்பங்களே காலியில் வாழ்கின்றன. ஆனால் அங்கு நுழையும் போதே ஒரு இந்துக் கோயில்தான் இருக்கின்றது. அதனை எவராவது உடைக்க முற்படுகிறார்களா? இல்லையே? இவற்றை வைத்து பார்க்கும்போது மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வேலைகளை அரசியல்வாதிகளே செய்கின்றனர்.
அவ்வாறு செய்தால்தான் அவர்களுக்கு நாடாளுமன்றம் செல்லலாம். அதற்காக அவர்கள் மக்களை அடிமைகளாகவும் ஏழைகளாகவும் வைத்திருக்கின்றார்கள்.
சமயங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிளவுபடுத்த நினைத்தால் அதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.