ஹற்றன் நஷனல் வங்கியின் தன்னிலை விளக்கம்!

ஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச்சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என வங்கி முகாமைத்துவத்தின் தகவல்கள் தெரிவித்தன.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுதொடர்பில் தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்ததாவது:

முழுமையான தகவல்களின் பின் புலத்தில் நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் ஹற்றன் நஷனல் வங்கி பங்கு கொள்வதில்லை.

எமது வங்கி சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப் படுத்தியது. எந்தவொரு நிகழ்வு தொடர்பிலும் முகாமைத்துவத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அஞ்சலி நிகழ்வாகவிருந்தாலும் சரி முகாமைத்துவத்தின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானது.

வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. தற்போது கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வும் அதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது.

எமது உத்தியோகத்தர்கள் இருவரும் பழிவாங்கலுக்கு உள்படுத்தப்படவில்லை. அனுமதி பெறப்படாத நிகழ்வு ஒன்றை நடத்தியமை வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையை நடத்திய வங்கியின் மனித வள அதிகாரி தமிழர். எனவே இன ரீதியான எந்தவொரு பழிவாங்கலும் இந்த விடயத்தில் பின்பற்றப்படவில்லை.

இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன்தான் ஆரம்பிக்கவேண்டும். சமூக ஊடகக் கொள்கைகளை மீறியதுதான் குற்றச் சாட்டு. விசாரணைகள் நிறைவடைந்ததும் உரிய முடிவு வெளிப்படுத்தப்படும் – என்றது.

Related Posts