தென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்

இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒரு வருடத்துக்கும் குறைவான வயதை உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழக்கும் 8 ஆவது குழந்தை இது எனவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பீ.விஜேசூரிய தெரிவித்தார்.

குறித்த குழந்தை, பிறப்பிலேயே இருதய நோயைக் கொண்டிருந்ததுடன் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அந்த வைரஸ் காய்ச்சல் நிமோனியா காய்ச்சலாக மாறியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அக்குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில் இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா தொற்றால் உருவாகும் மர்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் சிறுவர்களாவர். ஒருவர் கர்ப்பிணித் தாயாவார்.

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் மூடிவிட தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. அத்துடன் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் இன்றுவரை மூடிவிட தீர்மனிக்கப்பட்டிருந்தது.

எனினும் வைரஸின் அதிக பரவல் காரணமாக, எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் தென் மாகாணத்தின் 8 கல்வி வலயங்களின் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவை மூடவும் அதுவரையில் முன்பள்ளிகளையும் மூடவும் தென் மாகாண கல்வி அமைச்சூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் காய்ச்சல் முன் பள்ளி சிறுவர்கள், அந்த வயதை அண்டிய வயதுப் பிரிவினரை வெகுவாக பாதிக்கும் நிலையிலேயே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த வைரஸ் காய்ச்சலை ஏர்படுத்தும் இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா தாக்கத்துக்கு உள்ளான மேலும் 400 பேர் தென்மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் மாத்தறை, கராபிட்டிய, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் மட்டும் 251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி, கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்திய சாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடன் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு உத்தர்விட்டுள்ளார்.

அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவசியமான ஹைப்லோ ஒட்சிசன் இயந்திரங்கள் 10 காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்ரும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக காணப்படுவதாகவும் அவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Posts