யாழ்.நகரில் இடம்பெற்றுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்படவில்லை. வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறும்போது பொது மக்களின் போக்குவரத்துக் குறித்து மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும்.
யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த புதன்கிழமை யாழ். மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வீதி புனரமைப்புப் பணிகள் குறித்த கலந்துரையாடல் யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட அரச அதிபர் மேலும் தெரிவித்ததாவது:
வீதி புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் இடம்பெறவில்லை. பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள் சிரமங்கள் குறித்து பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. சில வருத்தத்துக்குரிய சம்பவங்களும் இடம்பெற்று வந்துள்ளது. உரிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படாமையால் இந்தச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இது போன்றவை தொடர்ந்தும் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் இதற்கு எதிராகவோ நேரடியாகவோ தமது எதிர்ப்புக்களைக் காட்டும் நிலை உருவாகலாம்.என்றார். வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் என்பன நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டது.