இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் எழுதிய கடிதம் மற்றும் மகனின் அடையாள அட்டையின் ஸகான் பிரதி எனபனவும் படைத் தலைமையகத்தால் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
மேசன், தச்சன், பிளம்பர் போன்ற வேலைகளுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் 28 வயதுக்கு உள்பட்ட இளையோர்கள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களில் 60இற்கும் அதிகமானோர் இவ்வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு அரச வேலையை வழங்க கோரி பெற்றோர் கோருகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்தபுரத்தை சேர்ந்த ம. கேதீஸ்வரி என்கிற தாய் அவரின் 23 மூத்த மகனுக்கு இவ்வேலையை வழங்குவதன் மூலம் குடும்பத்தின் வறுமை நிலையை போக்க உதவுங்கள் என்று யாழ். மாவட்ட கட்டளை தளபதியை எழுத்துமூலம் கோரி உள்ளார்.
இவர் இக்கடிதத்தில் தெரிவித்து உள்ள விடயங்கள் வருமாறு:-
எனது கணவர் 16 வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தை கைவிட்டு சென்றுள்ளார். நானும், 04 பிள்ளைகளும் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம். இருவர் பெண் பிள்ளைகள். நான் தையல் வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளேன்.
இருப்பினும் கடந்த வருடம் யாழ். போதனா வைத்தியசாலையில் வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது உள்ளது.
எனது மூத்த மகன் யுகனேசன்தான் கூலி வேலை செய்து குடும்பத்தை இப்போது காப்பாற்றுகின்றார். ஆயினும் எனது குடும்பத்தினதும், பிள்ளைகளினதும் எதிர்காலம் குறித்து பெரிதும் அஞ்சுகின்றேன். எனது குடும்பம் மிக வறிய நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு எனது மகனுக்கு வேலை வழங்குமாறு தாழ்மையுடன் கோருகின்றேன்.
யுகனேசன் உள்பட எனது மூன்று பிள்ளைகள் யாழ். வட்டுக்கோட்டை சிறுவர் இல்லத்தில் இருந்தே 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர் என்பதையும் இத்தால் அறிய தருகின்றேன் – என்றுள்ளது.