யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 8ம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றி அப்பகுதியில் மக்களை மீளவும் மீள்குடியேற்றம் செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவடி நிலைப்பகுதியில் கடற்படையினர் பாரியளவில் புதிய கடற்படை முகாமை அமைத்து வரும் நிலையில், பொன்னாலை சந்தியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்து தங்கிய படையினர் தற்போது பாரியளவில் நிலையான முகாமொன்றை அமைத்து வருகின்றனர்.
இந்த நிலம் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலமாகும். ஏனினும் நிலச்சொந்தக்காரரிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.
இந்நிலையில் பொன்னாலை உயர்பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்ற கருத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.