வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,
இலங்கை ஆசிரியர் சங்கம்,
ஊடக அறிக்கை
11.05.2018
வடமாகாண கல்வியமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது
தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றியோருக்கான உள்ளக இடமாற்றத்தின்போது – யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் 7 வருடத்தைப் பூர்த்திசெய்திருந்த ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றச்சபையால் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கு கடமையாற்றி சிலமாதங்களுக்குள் வடமாகாண கல்வியமைச்சரின் முறையற்ற தலையீட்டால் – முன்னைய கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரிக்கே மீண்டும் இடமாற்றச்சபை எதுவுமின்றி வழங்கப்பட்டது.
7 வருடம் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக பணியாற்றி- இடமாற்றம் வழங்கப்பட்ட ஒருவரை குறுகிய காலத்துள் அதே பாடசாலைக்கு – இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி வழங்கப்பட்ட இடமாற்றம் முறைகேடானது என முன்னைய வடமாகாண கல்வி செயலாளர் இ.இரவீந்திரனுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியதற்கிணங்க – அவரால் இந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் – வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு.அனந்தராஜின் கையொப்பத்துடன் கூடிய- யாழ்.வலயக்கல்விப்பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் குறித்த ஆசிரியை தற்போது யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் மீண்டும் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் – ஒரு திணைக்களத்தலைவர் இல்லை. அவர் தனிப்பட்ட உத்தியோகத்தராவார். அவரது கடிதத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டமை மிகப்பெரிய அதிகார துஸ்பிரயோகமாகும். இத்தகைய செயற்பாடு மிக மோசமானதாகும்.
அத்துடன் – வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் – குறித்த பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்க அனுமதித்தமை யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரின் முறைகேடான செயற்பாடாகும்.
வடமாகாண கல்வியமைச்சரின் நெருங்கிய உறவுக்காரரான குறித்த பாடசாலை அதிபரும் – வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரனும் -குறித்த ஆசிரியைக்கு சார்பாக – மிகப்பெரும் முறைகேட்டைப் புரிந்துள்ளனர்.
இவ்வாறான நிர்வாக முறைகேடுகள் வடமாகாண கல்வி புலத்தில் தோன்றியிருப்பது – மிக ஆபத்தான செயற்பாடாகும்.
இவ்விடயம் தொடர்பாக – கௌரவ வடமாகாண முதலமைச்சர் மற்றும் கௌரவ வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி -உரிய விசாரணை மேற்கொண்டு – முறைகேட்டை தடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் – தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் தொடர்ச்சியாக பல முறைகேடுகளை செய்துவருகின்றார்கள்.
இம்முறைகேடுகளுக்கு எதிராக செயற்பட்டு – வடமாகாணத்தின் கல்வியை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.