யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டத்தினை வாடகை அறவிடாமல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா வழங்கியமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் ஆதார பூர்வமாக ஆவணங்களுடன் சபையில் குற்ற சாட்டை முன் வைத்தார்.
யாழ்,மாநகர சபையின் இரண்டாம் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போதே குறித்த குற்றசாட்டை முன் வைத்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தாக யாழ் நகரின் மத்தியின் கடைத் தொகுதி மேல் மாடியில் இலக்கம் 05 கடையினை சபையின் அனுமதியினைப் பெறாமல் முன்னாள் முதல்வர் தன்னிச்சையாக வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2017ம் ஆண்டு மே மாதம் வரையான காலப் பகுதிக்கான வாடகை மற்றும் வரி , தண்டம் உட்பட 10 லட்சத்து 16 ஆயிரம் ரூபா சபைக்குச் செலுத்த வேண்டியுள்ளது.
குறித்த பணம் சபைக்குச் செலுத்தப்படவில்லை. இதேபோன்று இலக்கம் 2 கடையினையும் வழங்கிய வகையில் 56 ஆயிரத்து 12 ரூபா நிலுவை உள்ளது.
இதேபோன்று சங்கிலியன் வீதியில் அமைந்திருந்த சபைக்கான கட்டிடத்தினை இராணுவ புலனாய்வாளர்களிற்கு கொடுத்த நிலையில் அக் கட்டிடத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் 22 மாதங்களாக தனியார் வீட்டில் வாடகை அடிப்படையில் இயங்கியது இதற்காக மாதம் ஒன்றிற்கு 13 ஆயிரம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபா பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த மூன்று சம்பவங்களிற்குமான சான்று ஆவணங்களும் என் கை வசம் உண்டு இதனால் சபைக்கு ஏற்பட்ட நட்டம் மற்றும் நிதி கிடைக்காமை போன்றவற்றினால் 13 லட்சத்து 48 ஆயிரத்து 12 ரூபா பணம் வீணக்கப்பட்டமை சபை ஆவணங்கள் மூலமே உறுதியாகின்றது.
எனவே இதனையும் இது போன்ற வேறு சம்பவங்கள் இருப்பினும் அவற்றையும் கோரிப்பெற்று உடன் ஓர் வலுவான குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இச் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கோருகின்றேன்” – எனத் தெரிவித்தார். அத்துடன் தான் முன் வைத்த குற்றசாட்டுகளுக்காண ஆதாரங்கள், ஆவணங்களையும் சபையில் காண்பித்தார்.
இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்திலேயே குறித்த கட்டடம் வாடகைக்கு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கட்டடம் வழங்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே தமது ஆட்சிக்காலம் முடிவுற்றுவிட்டது என்றும் பின்னர் வாடகை அறவிடாததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் சங்கிலியன் வீதியில் உள்ள குறித்த கட்டடம் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் காவற்துறையினர் அலுவலகம் அமைக்கவே வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் லோகதயாளன் பொலிசார் அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டிருந்த அக்காலப்பகுதிகளில் ஏன் காவற்துறை அலுவலகம் என ஒரு விளம்பரப் பலகை கூட வைக்கவில்லை என்றும் அங்கு மக்களுடன் தொடர்புடைய எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என சபையில் தீர்மானிக்கப்பட்டது.