ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 131 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே முதலாம் திகதி, காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய பொலிஸ் பிரதானி மொகமட் ஹருன் நேற்று முன்தினம் மாலையே அறிக்கை வெளியிட்டார்.
இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.
இவர்களை கப்பலில் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில், இருந்த மூன்று இந்தோனேசியர்களும், நான்கு மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆள்கடத்தல் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளைச் செய்த 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 127 இலங்கையர்கள் சட்டவிரோதமாக மலேசிய கடல் எல்லையில் நுழைந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 9 மலேசியர்கள், 4 இந்தோனேசியர்கள் மற்றும் 4 இலங்கையர்களுக்கு எதிராக சட்டவிரோத ஆள் கடத்தலின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என மலேசிய பொலிஸ் பிரதானியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.