ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த காலங்களில் ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது குறித்த கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகவே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து இக்குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.
இந்நிலையில் லண்டனில் வதியும் குறித்த இருவரையும் “நாடு கடத்தல் வழிமுறை”யில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா மற்றும் அன்ரன் ஜீவராசா ஆகிய மூவருக்கும் இரண்டைத் தூக்குத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
இவ்வழங்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டபோது, குற்றவாளிகள் இருவரும் வெளிநாடில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.