யாழ். இணுவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியினால் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.
மேலும் பல இடங்களில் வேம்பு மற்றும் இதர நிழல் தரும் மரங்களை எதிர்காலத்தில் நாட்ட அவர்கள் எண்ணியுள்ளனர். இந்த சிறப்பான சமூக சேவையில் சமூகநலன் விரும்பிகளும் பலரும் இணைந்து கொண்டனர்.
பெருகி வரும் நகராக்கத்தில், பல்வேறு பயன் தரும் மற்றும் நிழல் தரும் மரங்கள் தறித்து அகற்றப்பட்டு வரும் நிலையில், இந்த கோடைகால வெப்பத்தில் இளைஞர்களின் சேவையை ஊர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இவர்களின் இந்த சமூக சேவையானது அனைத்து ஊர் இளைஞர்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழ்வது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இவ்வாறான சேவைகளை தொடருவதன் மூலம் பசுமையான சூழலை உருவாக்கி, எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.