வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர்கள் நியமனம் செய்யப்படுவது பொருத்தமற்ற நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பில் தேவைஏற்படும்போது நீதிமன்றை நாடவுள்ளோம்.
இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்குத் தகுதியான அதிபரை நியமனம் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தரம் I “ஏபி’ தராதரமுடைய பாடசாலைக்கு தரம் 2 I அல்லது அதற்கு மேல் தராதரமுடையவரே அதிபராக நியமிக்கப்படவேண்டும் என்பது நியதி.
சுற்றறிக்கை அதனையே கூறுகிறது. ஆனால் தரம் 2 II தராதரமுடைய அதிபரை நியமிக்கவுள்ளதாக அறிகிறோம். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணைக்கு உரியவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், பாகுபாடுகள் எதுவும் பொது நியமனங்களில் இருத்தலாகாது.
நியமனங்கள் தகுதி அடிப்படையில் ஒழுங்குமுறைப்படி செய்யப்படல் வேண்டும். கல்வி அதிகாரிகள் பக்கச் சார்பாக நடக்காது நியாயமாக நடந்து பணியாற்ற வேண்டும்.
வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள் மோசமான நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளோம். தேவை ஏற்படின் நீதிமன்றையும் நாடுவது என்று தீர்மானித்துள்ளோம். என்றார்.