Ad Widget

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!!

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த 39 வயதுடைய ஆசிரியர், சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இதன் பிரகாரம், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, எதிரிக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும், அதனை செலுத்த தவறின் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில்,இந் நீதிமன்றம் இவ்வகையான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்ற போதிலும் சமூகத்தில் இவ்வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். சமூகத்தில் கௌரவமான புனிதமான தொழில்களில் இருந்து கொண்டு இவ்வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள், ஈடுபட நினைப்பவர்களுக்கு இத்தீர்ப்பின் மூலம் எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Related Posts