முல்லைத்தீவுக்கு சென்று கனவயீர்ப்பில் ஈடுபட வடமாகாண சபை தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையின் 120 வது விசேட அமர்வு நேற்று (05) பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கல்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற பிரேரணையை முன்மொழிந்தார்.

இந்தப்பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது, உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று எதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன், தமிழர் சுதந்திரத்தைப் பறித்து மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழி சமைக்க வேண்டாமென்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கமைய, உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பின்னர், எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று வெலிஓயா மற்றும் கிதுள்ஓயா உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிடுவதுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளனர்.

இதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக, மாகாணசபை உறுப்பினர்கள் விரைவில் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts