யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த முறைப்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறிப்பிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செயிட்டிய குணசேகர குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.