தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பிராந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யாழ். மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தில் கடமையாற்றி வந்த இந்த யுவதி எழுதியுள்ள கடிதத்தில் “அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர் தான் தனது மரணத்திற்கு காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன், பெரும் தொகையான பணத்தை தான் திருடி விட்டதாக தெரிவித்து தற்போது அச்சுறுத்துவதாகவும், எனவே தான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் குறித்த சட்டத்தரணியிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.