Ad Widget

சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸார், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடி வடக்குப்பகுதியில் வீடு ஒன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸ் குழு ஒன்று, அங்கு இருந்த மரக்கிளைகளில் தடிகளை முறித்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டு உரிமையாளர் எங்கே, என வினாவியுள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த பெண்கள், அவர் இங்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இருந்தும், பொலிஸார் அதனைப்பொருட்படுத்தாது, அயல்வீடு வரை தன்னை தேடியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

அங்கு வந்திருந்த பொலிஸாரில் பெரும்பாலானோர் சிவில் உடையில் காணப்பட்டதாக வீட்டில் இருந்தவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே இது தொடர்பாக, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், வீட்டுக்கு அண்மையாக, பொலிஸாருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் இடம்பெற்ற போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சம்பவத்தில் தான் குறுக்கிட்ட போது, தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடே மேற்படி பிரச்சினையின் பிண்ணனி எனவும் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts