வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாறி, வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ‘மக்களுக்கான அறிவு விருத்திப் பணி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாங்கள் எதற்காக வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கோருகின்றோம்? வடக்கும் கிழக்கும் தொடர்ந்து தமிழ் பேசும் பிரதேசங்களாக தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1833ஆம் ஆண்டில் பிரிந்திருந்த இந்நாட்டின் அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக மாற்றியிருக்காவிட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்து தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகவே இருந்திருக்கும்.
நாங்கள் நாட்டின் சிறுபான்மையர் என்று கருதப்பட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினர். ஆனால் தொடர்ந்து வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைக்க எத்தனித்தனர். தமிழ் பிரதேசங்களில் பெரும்பான்மையினரின் குடியேற்றங்களை முடக்கி விட்டு, முழு நாடும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றார்கள். இந்நிலை தொடர்ந்தால் வடக்கு கிழக்கிலும் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விடுவார்கள்.
இன்று சமஷ்டியை நாங்கள் கேட்பதில் பிழையில்லை. நாட்டை முழுமையாக சிங்கள பௌத்தமயப்படுத்த ஒரு சாரார் முயன்று வருகின்றனர். குறிப்பாக திருகோணமலை நகரத்தைச் சுற்றி சிங்கள மக்கள் முழுமையாக ஆக்கிரமித்திருப்பதை அவதானித்தேன். அதற்காகத்தான் நாம் வடக்கு கிழக்கை இணைத்து சமஷ்டியை வழங்குமாறு கோருகின்றோம். வடக்கு கிழக்கு தமிழ்ப்பேசும் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எமது மொழி, நிலம், பொருளாதாரம், கலாசாரம் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.