நேற்று முன்தினம் (15) இரவு வேளையில் கிளிநொச்சி, முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது.
முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது. அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக் கதவுகளும் உடைக்கப்பட்டு முலவிக்கிரகத்தையும் உடைத்துள்ளதுடன் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கப் பொட்டுக்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பவற்றுடன் ஓர் விகிரகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் இரண்டாம் கட்டை பிள்ளையார் ஆலயத்திலும் ஒரு பெருக்கிசாதங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று ஆலயங்களிலும் ஒரு குழுவினரே கைவரிசையினைக் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்வாலயங்களில் களவு போன பெறுமதிகளை விட மூல விக்கிரமத்தினை உடைத்தமையால் இவ் இரு ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் செய்ய கூடிய பணம் தேவைப்படும் என ஆலயங்களின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்
மேலும் கிளிநொச்சியை பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ள போதும் பொலிஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை பொலிஸாரின் இவ் அசமந்தப் போக்கே தொடர்ந்தும் கிளிநொச்சியில் திருட்டு மற்றும் அடாவடிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.