இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.
யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் – 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர் பி.ஜோன்சன் தலைமையில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இக் கண்காட்சியில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் மாணவர்களினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தனியார் கண்டுபிடிப்புக்களும் இதன் போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மிதிவெடி அகற்றும் புதிய கருவிகள், மரத்தில் செதுக்கப்பட்ட தலைவர்களின் உருவப்படங்கள் உட்பட பல்வேறு புதிய கருவிகள் 60 காட்சியறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இக் கண்காட்சி தொடர்பில் தலைவர் ஜோன்ஸ்சன் தெரிவிக்கையில்,
இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கும், தமிழர் திறமையினை உலகறியச் செய்யவும் இக் கண்காட்சிகள் நடாத்தப்படுகின்றது.
இதில் 15 பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன. முன்னர் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களது உபகரணங்கள் மாகாணமட்டத்தில் காட்சிப் படுத்தப்பட்டது.
அதிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களது உபகரணங்கள் தேசிய மட்டப் போட்டியில் காட்சிப் படுத்தப்பட்டது அவ்வாறான 50 மாணவர்களது புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது பார்வையாளர்களால் முக்கியப்படுத்தப்பட்ட சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உரிய இலக்கங்களை அதற்கு உரிய பெட்டியில் இடவேண்டும். அதன்படி தெரிவாகும் 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படும்.
கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பரிசில்களும் வழங்கப்படவுள்ளது என்றார்.
அதேவேளை, கண்காட்சியினைப் பார்வையிட வந்திருந்த மாணவர்களிடம் இது தொடர்பில் கேட்கும் போது,
பாடசாலை மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. ஏனெனில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இதனை அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் மற்றைய மாணவர்களும் இது போன்ற கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவதற்கு இது சிறந்த களமாகும்.
நாம் இதுவரை பார்த்திராத சில கண்டுபிடிப்புக்களும் உள்ளன. எமக்குத் தேவையானதொரு கண்காட்சியாகவே இது அமைந்துள்ளது என்றனர்.