வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்!

இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 118வது அமர்வு நேற்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக சாப மண்டபத்தில் நடைபெற்ற போது வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

இதன்போது, யாழ். தேர்தல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று கூடியிருந்தது. இதன்போது இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பது தொடர்பில் தெளிவாக ஆராயப்பட்டது.

அதில் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகள் அனைத்தையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்றில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அவை தலைவர் மேலும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இராணுவ ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு சீருடைகளும் இராணுவ சீருடைகளை ஒத்ததாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மேற்படி முன்பள்ளிகளை வடமாகாண சபை பொறுப்பேற்றால் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் வரை காணப்படுவதால் மற்றய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அதே அளவு ஊதியத்தை வழங்கவேண்டிய நிலை வரும், இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் வரும் என கூறினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளை மட்டுமல்லாமல் அந்த முன்பள்ளிகளுக்காக பாதுகாப்பு ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றே பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தை சரி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.

Related Posts