கண்டி மாவட்டத்தில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் முப்படையினரும் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் கடந்த ஒரு வாரகாலமாக நீடித்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், வீடுகள், உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன சிங்கள இனவாதக் கும்பல்களால் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டன.
அதனையடுத்து அங்கு பொலிஸ் ஊடரங்கு நடைமுறைக்கு வந்தது. அத்துடன், அவசரகால நிலையும் ஒரு வாரகாலத்துக்குப் பிரகடனப்படுத்தப்பட்டது. முப்படையினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவுவரை 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 10 பேர் சமூக ஊடகங்களில் இனக் குரோதக் கருத்துக்களைப் பரப்பியமை மற்றும் பொலிச் செய்திகளை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன வன்முறைகளால் ஊடரங்கு நடைமுறைப்படுத்தபட்டமையை அடுத்து கண்டி மாவட்டப் பாடசாலைகளை மறு அறிவித்தல்வரை கல்வி அமைச்சு மூடியிருந்தது.
எனினும் அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் வழங்கிய தகவலையடுத்து கண்டி மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.