“திவிநெகும’ சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது.
* “திவிநெகும’ நடைமுறைக்கு 2/3 பெரும்பான்மை அவசியம்
* வரைவில் பல பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை
* அதில் ஒரு பிரிவுக்கு வாக்கெடுப்புத் தேவை
* அனைத்து மாகாண சபைகளிலும் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும்
எனவே ஆளுநரின் அனுமதியை அங்கீகாரமாக கருத முடியாது. மாகாண சபையின் கருத்து முறையாக பெறப்பட வேண்டும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.
“திவிநெகும’ சட்டவரைவு தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சபாநாயகர் நேற்றுச் சபையில் வாசித்தார்.
அந்தத் தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:
சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு முன் அச்சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானதா என்று ஆராய்ந்துபார்த்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உள்ளது.
ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்று வடமாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது.
எனவே, ஆளுநரின் அங்கீகாரத்தை வடமாகாண சபையின் அங்கீகாரமாகக் கருதமுடியாது. மாகாணசபையின் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இச்சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும்.
அரசமைப்பின் 12(1) சரத்தின் படி சட்டவரைவின் “ஏ’ பிரிவு அரசமைப்புக்கு முரணானதாகும். எனவே, இதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
இச்சட்டவரைவின் 4,42 ஆம் பிரிவுகள் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் அதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதே போல், சட்டவரைவின் 8(2) சரத்து அரசமைப்பின் 3 ஆவது பிரிவுக்கு முரணாக இருப்பதால் இதை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
திணைக்களத் தலைவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவதாக இருந்தால் அது அரசமைப்புக்கு முரண் அல்ல. சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. அதே போல் சட்டவரைவின் 11 மற்றும் 18ஆம் பிரிவுகளும் அரசமைப்புக்கு முரணாக உள்ளன.
ஆகவே, இதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும். இச்சட்டவரைவின் 14 ஆவது பிரிவு அரசமைப்புக்கு முரணாக உள்ளபோதிலும் “திவிநெகும’ திணைக்களப் பணிப்பாளர்கள், “திவிநெகும’ மக்கள் சங்க நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு என்பவை தொடர்பில் வலய அமைப்புகளின் கருத்தை அறிந்து செயற்படுவதால் அப்பிரிவு அரசமைப்புக்கு முரணாகாது.
இச்சட்டவரைவின் 17(1) பிரிவு அரசமைப்புக்கு முரணானது. ஆகவே, அரசமைப்பின் 84(2) ஆவது சரத்தின்படி இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல, சட்டவரைவின் 19 ஆவது பிரிவும் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் இதனையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், சட்டவரைவின் 25(4) மற்றும் 29(4) ஆகிய பிரிவுகள் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் இதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
சட்டமூலத்தின் “ஏ’யில் உள்ள சில பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை. நாடாளுமன்ற அனுமதியுடன் கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்வதாயின் இது அரசமைப்புக்கு முரண்படா.
ஆகவே, இச்சட்டவரைவு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று சபாநாயகர் கூறினார்.