இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களிற்கு இன்றுவரை எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்திற்கு பின்னர் பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக்கப்பட்டுள்ளன. அதிலும் 41 வயதிற்கு குறைந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இன்று அதிகமாக உள்ளனர். இன்றைய நிகழ்விற்கு தென்னாபிரிக்க தூதுவர் வருகை தந்துள்ளார்.
அவர்களும் தமது அரசியல் உரிமைகளை போராடியே பெற்றவர்கள் என்ற வகையில் எமது பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிவார். இவ்வாறு யுத்தம் காரணமாக பல சிறுவர்கள், பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகியதும், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களிற்கு இன்றுவரை எவ்வித தண்டனைகளும் வழங்கப்படாத நிலையே தொடர்கின்றது.
இது மாத்திரமல்லாது கிழக்கு மாகாணத்தில் பல பெண்கள் அனுபவித்த கொடுமைகளிற்கு இன்றுவரை விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை” என கூறினார்.