கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
எனினும், தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது. களத்தில் பெருமளவு விசேட அதிரடிப்படையினரும் ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோதலில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தெல்தெனிய, திகன மற்றும் பல்லேகல உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதோடு, வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.