கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, பாடசாலை நடவடிக்கைகள் என அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இந்நிலையில் இன்று காலை முதல் இந்நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தல், வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.