‘மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்’ : வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலையை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு இளைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதப்படுகொலையை கண்டித்தும், இவ்விடயத்தில் ஐ.நா. தலையிட்டு உடனடி தீர்வு வழங்க வேண்டுமென கோரியும், கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனித படுகொலையை ஐ.நா. கண்டுகொள்ளாததைப் போன்று, தற்போது சிரியாவில் இடம்பெறும் மனிதப் படுகொலையையும் கண்டுகொள்ளவில்லை’, 2009இல் முள்ளிவாய்க்கால், 2018இல் சிரியாவா?’, ‘பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு நீதி வழங்கு’, ஈழ மக்களின் இன அழிப்பிற்கு நீதி எப்போது?’, ‘இன்னுமொரு முள்ளவாய்க்கால் வேண்டாம்’ உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

அதன் பின்னர், முல்லைத்தீவு தபால் அலுவலகத்தில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் பிரதேச சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts