மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் : சம்பந்தன்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே அவர் மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்தார். இதன்போது, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னரான அரசியல் நிலைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்ட வேண்டும் எனவும் புதிய அரசியலமைப்பிற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையைப் பெற வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

Related Posts