முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இப்பேரூந்து சேவையை நடத்தும் முல்லைத்தீவு இலங்கைப் போக்குவரத்து டிப்போவின் பொறுப்பதிகாரி குணசீலன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஏழு வருடங்களுக்கும் அதிகமாக இந்தப் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகளிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த போதிலும் எந்தவித சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்த இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிக்கு அம்பாள்புரம் மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவர்களுக்கான இப்போக்குவரத்துச் சேவை நடத்துவதை குழப்பும் வகையில் செயற்படுவதற்கு சில தீய சக்திகள் முயற்சிசெய்த போதிலும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் தலையீட்டில் அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடை இதுபோன்ற அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதுவிடத்து அவைதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுமாயின், அவை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.