தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தினைத் தவிர்த்து ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்று ஆரம்பிக்கப்படுமிடத்து, அதற்காக புதிய பதவி கோரிக்கைகளை முன்வைக்க ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி தயாராக இல்லை என மஹிந்த, ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய அரசியல் நிலையில் புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான அவசியம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சி முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.