கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்க வேண்டாம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் நீண்ட காலமாக பொலிஸார் கையகப்படுத்தியிருந்தார்கள்.

2013 ஆம் ஆண்டு பொலிஸாரின் சேவைக்கென பொதுமக்களின் மயானமாக பயன்படுத்தப்பட்டு வந்த பெரியகுளம் காணி வழங்கப்பட்டது. அதன் பின்பும் கனகராயன்குள பொலிஸார் குறித்த காணிகளை விடுவிப்பதற்கு மறுத்து வந்தார்கள்.

குறித்த பிரச்சினை தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச மக்களால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் கனகராயன்குளம் பொலிஸாரின் அதிகாரிகள் தாம் விடுவிப்பதாக கூறியுள்ள போதிலும் அக்காணிகளை தம் வசம் வைத்திருந்து அபிவிருத்தி வேலைகளையும் அக்காணிகளில் முன்னெடுத்து வந்துள்ளார்கள்.

கனகராயன்குளம் பொலிஸாரின் இச்செயற்பாட்டிற்கு பொதுமக்களால் கடும் விசனம் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வருட இறுதியில் புதிதாக மாற்றம் பெற்று வந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சேமரத்தின விதான பத்திரன குறித்த காணிகளை கனகராயன்குள பொலிஸாருக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வந்துள்ளார்.

கனகராயன்குளத்தில் பொதுத் தேவைகளுக்கான கட்டங்கள் கட்டுவதற்கோ, வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கோ எந்தவொரு பொதுக்காணியும் இல்லாத நிலையில் அரச அதிபரின் நடவடிக்கை பலத்த சந்தேகத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் நெடுங்கேணிக் கிராமங்களை அண்மித்துள்ள பகுதிகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற அரசஅதிகாரிகள், இப்பிரச்சினையிலும் பாரமுகமாக இருப்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேற்படி காணிகளை பொலிஸாருக்கு வழங்குவதை நிறுத்தி, அவை பொதுத் தேவைகளுக்காக விடுவிக்கும்படி கோருகின்றோம். அது சாத்தியப்படாது போனால் சகல தமிழ் தரப்புகளையும் பொது அமைப்புகளையும் ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டிய ஏற்படும் என்பதை சகல அரச அதிகாரிகளுக்கும் மாவட்ட அரச அதிபரினதும் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts