இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை, அவர்களுடைய இடத்தில் இருந்து தன்னால் உணரக்கூடியதாக இருந்ததென விருதுவென்ற பிரபல ஹொலிவூட் நடிகையும் ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதுவருமாகிய ஆஷ்லி ஜூட் தெரிவித்துள்ளார்.
அம்மக்களின் நிலையறிந்து தான் மிகவும் வேதனையடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலின ரீதியிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்காகக் கொண்டு, ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதுவராக ஆஷ்லி ஜூட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையென தெரிவித்த ஆஷ்லி ஜூட், சந்தர்ப்பம் கிடைத்தால் தான் வடக்கிற்குச் செல்ல ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், பாலின ரீதியிலான வன்முறைகள் இலங்கையில் தொடர்கின்றதாகவும், குறிப்பாக பொதுப் போக்குவரத்தின்போதே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான விடயங்களை தைரியமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25ஆக அதிகரித்துள்ளமையை வரவேற்ற ஆஷ்லி ஜூட், நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் தாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.